பணத்தகராறில் மைசூருவை சேர்ந்தவர் கொலை: போலீசில் நண்பர் சரண்
பணத்தகராறில் மைசூருவை சேர்ந்தவரை கொன்று நண்பர் போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு: மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு அருகே ஹிமனகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் மகேசப்பா (வயது 45). பெங்களூரு ராமமூர்த்திநகர் ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது மகேசப்பாவும், மெக்கானிக்கான ராஜசேகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள். இதில் மகேசப்பா வங்கிகளில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி ராஜசேகர், அவரது தாய் உள்பட ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்த சிலரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி செய்தார். இந்த நிலையில் மகேசப்பா தனது சொத்துகளை விற்று ஜெயந்திநகர் பகுதியை சேர்ந்தவர்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் ராஜசேகர், அவரது தாயிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுபற்றி அறிந்த ராஜசேகர் தனது காரில் ஹிமனகுந்தி கிராமத்திற்கு சென்று மகேசப்பாவை சந்தித்து பேசினார்.
பின்னர் அவரை காரில் பெங்களூருவுக்கு அழைத்து வந்தார். ஆவலஹள்ளி பகுதியில் வந்த போது பணத்தை திரும்ப தருவது தொடர்பாக மகேசப்பா, ராஜசேகர் இடையே தகராறு உண்டானது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், மகேசப்பாவை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றார். இதையடுத்து ராஜசேகர், மகேசப்பாவின் உடலை காரில் ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று நடந்த விஷயத்தை கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.