ஷராவதியில் கப்பலில் ஏற்ற முயன்றபோது அணையில் விழுந்து மூழ்கிய லாரி

சாகர் அருகே ஷராவதி நீர்த்தேக்கப்பகுதியில், கப்பலில் ஏற்ற முயன்றபோது லாரி ஒன்று தவறி அணையில் விழுந்து மூழ்கியது. அந்த லாரியை ராட்சத கிரேன்கள் உதவியுடன் மீட்டனர்.

Update: 2023-08-04 22:23 GMT

சிவமொக்கா:-

பாலம் அமைக்கும் பணி

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் சிக்கந்தூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி ஷராவதி அணை நீர்த்தேக்க பகுதியில் தீவுபோல் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஷராவதி நீர்த்தேக்கத்தின் பியோகோடு கரைப்பகுதியில் இருந்து சிக்கந்தூருக்கு செல்ல பல கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ராட்சத கிரேன்கள், லாரிகள், சிமெண்டு கலவை எந்திரங்கள் என அனைத்து பொருட்களும், எந்திரங்களும் ஷராவதி நீர்த்தேக்க பகுதியில் கரையில் இருந்து சிறிய கப்பல் மூலம் சிக்கந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

லாரி மூழ்கியது

அதன்படி நேற்று முன்தினம் ஒரு லாரியை நீர்த்தேக்க பகுதியின் ஒரு கரையில் இருந்து சிக்கந்தூருக்கு கொண்டு செல்ல சிறிய கப்பலில் ஏற்ற முயன்றனர். அதாவது அந்த சிறிய கப்பலில் லாரி பின்னோக்கிச் சென்று ஏற வேண்டும். அப்போது மிகவும் மெதுவாக லாரியை இயக்க வேண்டும்.

இல்லையெனில் கப்பல் நகர்ந்து விடும். அதனால் லாரியை மெதுவாக இயக்கி வரும்படி கப்பல் ஊழியர்கள் லாரி டிரைவரிடம் தெரிவித்தனர். ஆனால் அதை டிரைவர் கண்டுகொள்ளாமல் சற்று வேகமாக இயக்கி விட்டார். இதனால் கப்பல் சிறிது தூரம் முன்னே நகர்ந்து விட்டது. இதனால் நிலைதடுமாறிய லாரி நீர்த்தேக்கத்தில் விழுந்து மூழ்கியது.

கிரேன்கள் மூலம் மீட்பு

லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி அங்கிருந்த நெடுஞ்சாலை துறை என்ஜினீயர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக ராட்சத கிரேன்கள் மூலம் அந்த லாரியை மீட்டு தரையில் நிலை நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்