கோழிப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை சிக்கியது

கனகபுரா தாலுகாவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கியது.

Update: 2023-03-01 21:00 GMT

ராமநகர்:

கோழிப்பண்ணை

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உய்யம்பலி, முககுந்தி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சில நேரங்களில் கால்நடைகளை வேட்டையாடி கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றன. இந்த நிலையில் முககுந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலாளி. இவருக்கு சொந்தமாக கிராமத்தின் புறநகர் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது.

இந்த பண்ணையில் அவர் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது கோழிப்பண்ணைக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை பண்ணையில் கோழிகளை அடைத்து வைத்திருந்த பெரிய அறைக்குள் சென்றது.

சிறுத்தை சிக்கியது

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் கோழிப்பண்ணைக்குள் சிறுத்தை நடமாடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த அறையை பூட்டிவிட்டு, உடனடியாக பிரகாஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும் அதை கூண்டில் அடைத்து எடுத்து சென்று வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர். சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்