கேரளாவில் ஒரு ஹசிகோ...!! பிரேத அறைக்கு வெளியே 4 மாதங்களாக காத்திருக்கும் 'ராமு'
தினமும், மருத்துவமனை வராண்டாவில் இருந்து பிரேத அறை வரை செல்லும் ராமு, பின்னர் திரும்பி வந்து படுத்து கொள்கிறது.
கண்ணூர்,
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அரசு மாவட்ட மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் வாசலில் உள்ள வராண்டாவில் ராமு என்ற நாய் 4 மாதங்களாக சுற்றி, சுற்றி வருகிறது. தொடக்கத்தில் யாரும் அதனை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அந்த நாயின் உரிமையாளர் யாரென மருத்துவமனை ஊழியர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியாக இருக்க கூடும்.
அவர் உயிரிழந்ததும் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. தினமும், மருத்துவமனை வராண்டாவில் இருந்து பிரேத அறை வரை செல்லும் ராமு, பின்னர் திரும்பி வந்து படுத்து கொள்கிறது.
தொடக்கத்தில் பிறர் கொடுக்கும் உணவை வாங்க மறுத்துள்ளது. பின்னர் பிஸ்கெட் போன்ற சிறிய அளவில் உணவை உட்கொண்டது. வேறு நாய்களுடனும் சேராமல் இருந்துள்ளது.
இதனை ஊழியர் ராஜேஷ் கவனித்து உள்ளார். அவர் பெண் டாக்டர் மாயாவிடம் இந்த விவரங்களை கூறியிருக்கிறார். இதன்பின்னர், அந்த டாக்டர் ராமு என அதற்கு பெயரிட்டு, உணவும் கொடுத்து வருகிறார்.
ஒவ்வொரு முறை கதவை திறக்கும்போதும், ராமு ஆவலுடன் பார்க்கிறது. ஆனால், பிரேத அறைக்குள் கொண்டு செல்லப்படும் உடல்கள் மறுபுறம் உள்ள வாசல் வழியே, வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், அந்த உடல்கள் முன்பக்க கதவு வழியே திரும்பி வருவதில்லை.
ஆனால், இந்த விசயம் தெரியாத ராமு வாசலிலேயே காத்து கிடக்கிறது. அதனை தத்தெடுக்க பெண் ஒருவர் டாக்டரிடம் கேட்டுள்ளார்.
ஜப்பானில் சில தசாப்தங்களுக்கு முன் ஹசிகோ என்ற நாயை பேராசிரியர் ஹைடெஸ்பரோ என்பவர் வளர்த்து வந்திருக்கிறார். அவர் பணி முடிந்து திரும்பும் வரை ரெயில் நிலையத்தில் ஹசிகோ காத்திருப்பது வழக்கம்.
ஒரு நாள் பேராசிரியர் ரெயிலில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஆனால், தொடர்ந்து ஹசிகோ அவருக்காக காத்திருந்துள்ளது. அவர் திரும்பி வருவாரென்று ஒன்றல்ல, இரண்டல்ல 9 ஆண்டுகளாக காத்திருந்து கடைசியில் உயிரிழந்தது.
அந்த ரெயில் நிலையத்தில் ஹசிகோவுக்கு வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டது. பின்னர் இதுபற்றிய திரைப்படம், புத்தகம் ஆகியவையும் வெளிவந்து வரவேற்பை பெற்றன.