திருமணத்துக்கு மண்டபம் கொடுக்க மறுத்த அரசு அதிகாரி
தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் திருமணத்துக்கு மண்டபம் கொடுக்க மறுத்த அரசு அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:-
திருமண மண்டபம் முன்பதிவு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா பிராமிணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடமுனியப்பா. இவரது மகள் வெங்கடலட்சுமி. இவருக்கும் பாகேப்பள்ளியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் செய்ய வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே மணமகளின் அண்ணன் அவுகொண்டப்பா, குடிபண்டே டவுனின் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாஜாவள்ளி வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக கோவில் நிர்வாகி வெங்கடராஜப்பா என்பவரிடம் முன்பணம் செலுத்தி இருந்தார்.
தாழ்த்தப்பட்டவர்
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மணமகன் மற்றும் மணமகள் வீட்டார், திருமணம் செய்ய திருமண மண்டபத்திற்கு வந்தார்கள். அப்போது திருமண மண்டபம் பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் அண்ணன் அவுகொண்டப்பா, உடனே வெங்கடராஜப்பாவை செல்போனில் தொடர்பு கொண்டு திருமண மண்டபத்தை திறந்து விடும்படி கூறியுள்ளார்.
அப்போது அவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் திருமண மண்டபம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி வெங்கடேச பெருமாள் கோவில் எதிரில் சாதாரணமாக திருமணம் செய்து வைத்தனர்.
தாசில்தார் போலீசில் புகார்
இதுகுறித்து நேற்று அவுகொண்டப்பா குடிபண்டே தாசில்தார் சிக்பத் உல்லாவிடம் புகார் அளித்தார். அதில் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரி வெங்கடராஜப்பா திருமண மண்டபத்தை ஒதுக்கவில்லை.
எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தாசில்தார் சிக்பத் உல்லா, குடிபண்டே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரின் போலீசார் வெங்கடராஜப்பா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடகத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.