ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தொழிலாளி பரிதாப சாவு

ஆடுகோடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார். ஓட்டல் சமையல்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-24 18:45 GMT

ஆடுகோடி:-

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்க லட்சுமய்யா லே-அவுட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் சமையல்காரர்களாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராம் ஜோல்லார் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரும் வேலை செய்து வருகின்றனர். அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் ஓட்டலுக்கு சொந்தமான பொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கும் அறை இருக்கிறது.

அந்த அறையில் இருக்கும் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து முதல் தளத்தில் இருக்கும் ஓட்டலின் சமையல் அறைக்கு குழாய் மூலமாக கியாஸ் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலையில் ஓட்டலில் சமையல் செய்யும் பணியில் ராம் மற்றும் நாகராஜ் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

ஒருவர் சாவு

இதனால் ஓட்டலின் தரை தளத்தில் இருந்த பொருட்கள் மற்றும் இரும்புகதவை உடைந்து கீழே விழுந்தன. அந்த சந்தர்ப்பத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு முன்பகுதியில் இரும்பு கதவுக்கு முன்புறத்தில் ஒரு நபர் படுத்திருந்தார். அந்த நபர் மீது இரும்பு கதவு மற்றும் பொருட்கள் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அதே நேரத்தில் சமையல்காரர்கள் ராம் மற்றும் நாகராஜ் படுகாயம் அடைந்தார்கள்.

சிலிண்டர் வெடித்ததில் ஓட்டலில் தீயும் பிடித்திருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆடுகோடு போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள். அத்துடன் ஓட்டலின் தரை தளத்தில் இருந்த 9 கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு படைவீரர்கள் பத்திரமாக வெளியே மீட்டனர். அதே நேரத்தில் காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர் பெயர் ரவி (வயது 45) என்பதும், கூலி தொழிலாளியான அவர் ஓட்டலின் தரை தளத்தில் உள்ள பொருட்கள் வைக்கும் அறைக்கு முன்பாக படுத்து தூங்கியதும் தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ரவி பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெடித்து சிதறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

அந்த அறையில் ஒட்டு மொத்தமாக 10 வணிக கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு சிலிண்டர் மட்டும் வெடித்திருப்பதும், மற்ற 9 சிலிண்டர்களும் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த சிலிண்டர்கள் வெடித்திருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம்

நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்