சிகரெட் புகைத்ததை கண்டித்ததால் மதுபோதையில் போலீஸ்காரர்கள் மீது 4 பேர் கும்பல் தாக்குதல்
சிகரெட் புகைத்ததை கண்டித்ததால் மதுபோதையில் போலீஸ்காரர்களை 4 பேர் கும்பல் தாக்கியது.
யஷ்வந்தபுரம்:
பெங்களூரு ஆர்.எம்.சி.யார்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் சந்தோஷ் குமார் மற்றும் அவினாஷ். இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றனர். அந்த சமயத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்றபடி 4 வாலிபர்கள் சிகரெட் புகைத்தனர். அங்கு சென்ற போலீசார், இந்த இடத்தில் 'சிகரெட்' புகைக்க கூடாது என்றனர். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. அவர்கள் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், அவர்கள் 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும் காயமடைந்த 2 போலீஸ்காரர்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர்கள் சுதீர் குமார், கங்காதர், ரவிகவுடா, சதீஷ் ஆகியோர் என்பதும், அவர்கள் நந்தினி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. போலீஸ்காரர்களை தாக்கிய 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.