தேர் ஊர்வலத்தின்போது சாமியை தொட்ட சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்-8 பேர் மீது வழக்குப்பதிவு
தேர் ஊர்வலத்தின் போது சாமியை தொட்ட சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட உள்ளேரஹள்ளி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையடுத்து அங்கு அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தேரில் இருந்த அம்மனை தொட்டு வணங்கியதாக தெரிகிறது. இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருவிழா பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், நாராயணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சிறுவனின் குடும்பத்தினருக்கு திருவிழா பொறுப்பாளர்கள் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அபராத தொகையை செலுத்தாவிட்டால் கிராமத்தை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர், இதுகுறித்து மாஸ்தி போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி மாஸ்தி போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாலூரில் நடந்த இந்த தீண்டாமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.