தலித் பெண்ணை திருமணம் செய்ததால் வாலிபரிடம் ரூ.6 லட்சம் அபராதம் வசூல்

கொள்ளேகாலில் தலித் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் வாலிபரிடம் ரூ.6 லட்சம் அபராதம் வசூலித்த 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-06 20:40 GMT

கொள்ளேகால்:-

காதல் திருமணம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குங்கள்ளி கிராமத்தில் தலித் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த கோவிந்தராஜு என்பவரின் மகன் வெங்கடேசுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது அவர்கள் வெளியூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசனின் பெற்றோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை பார்ப்பதற்காகவும், கவனித்துக் கொள்வதற்காகவும் வெங்கடேஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார்.

ரூ.6 லட்சம் அபராதம்

அப்போது அவரது சாதியைச் சேர்ந்தவர்கள், 'நீ தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் உன்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம், நீ இங்கு வந்தது எங்களை இழிபடுத்தும் விதமாக உள்ளது, அதனால் நீ உன்னுடைய இங்கு வந்ததற்கும், உன்னுடைய பெற்றோரை சந்தித்து பேசுவதற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசும், அவரது மனைவியும் செய்வதறியாது நின்றனர். அப்போது அவர்களை வெங்கடேஷ், ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மேலும் ரூ.6 லட்சம் அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்ட அவர், அந்த தொகையை ஊர் முக்கியஸ்தர்களிடம் செலுத்தினார்.

15 பேரிடம் விசாரணை

ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ளாத ஊர் முக்கியஸ்தர்கள், தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக வெங்கடேசுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வர வேண்டும் என்று கூறினர். அதை ஏற்றுக்கொண்ட வெங்கடேசும், மொட்டை அடித்து ஊர்வலமாக வர தயாரானார். ஆனால் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வெங்கடேசின் மனைவியான தலித் பெண் இதுபற்றி கொள்ளேகால் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

அதன்பேரில் இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 15 பேரிடம் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்