கட்டிட கழிவுகளை கொட்டினால் ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-09-20 18:45 GMT

பெங்களூரு:-

கட்டிட கழிவுகள்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் தொகை பெருக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினமும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இதனால் நகரின் பல முக்கிய சாலைகள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதற்கிடையே பெங்களூருவில் சாலைகளின் இருபுறங்கள், காலி மனைகள், புறநகர் சாலைகளின் ஓரங்களில் கட்டிட கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூரு மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் சட்டவிரோதமாக குப்பை, கட்டிட கழிவு உள்ளிட்டவற்றை பொது இடங்களில் குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் சட்டவிரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களை பலமுறை எச்சரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே பொது இடங்களில் சட்டவிரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு டன் கட்டிட கழிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். எனவே இனி பொதுமக்கள் பொது

இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்