பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய டாக்டர் பணிநீக்கம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உத்தரவு

பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய டாக்டரை பணிநீக்கம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-08-22 21:14 GMT

பெங்களூரு:

நேரம் ஒதுக்கும் முறை

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூரு ஜெயநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜெயநகர் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தேன். இந்த ஆஸ்பத்திரியின் மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் டாக்டர்களை பார்க்க நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கும் முறையை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன்.

தீவிர சிகிச்சை பிரிவு

இதன்மூலம் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை பார்க்க காத்திருக்க தேவை இல்லை. இதேபோல் அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் ஆன்லைன் முன்பதிவு செய்து டாக்டர்களை பார்க்க நேரம் ஒதுக்கும் முறை அமல்படுத்தப்படும். இங்கு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 51 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு இங்கு உள்ளது.

இதற்கு தேவையான ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். நிரந்தர ஊழியர்களை நியமனம் நிதித்துறையின் ஒப்புதல் பெறப்படும். இங்கு 4 எலும்பு முறிவு மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை நடைபெறும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்கு நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. நோயாளிகளிடம் கலந்துரையாடியதில், அவர்கள் எந்த புகாரையும் கூறவில்லை.

டாக்டர் பணிநீக்கம்

நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லாமல் இங்கு வரும் நிலை ஏற்படுத்தப்படும். முன்பு இங்கு டாக்டர் ஒருவர் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைவதற்கு முன்பே அவரை பணிநீக்கம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். கொரோனா நோயாளிகளிடம் கூடுதலாக பெற்ற சிகிச்சை கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்