மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு ரூ.2¾ லட்சம் நகைகள் கொள்ளை
சிக்பள்ளாப்பூரில் மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு ரூ.2¾ லட்சம் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்-
சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள கந்தவாரபாகிலு பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் சிலர் வீட்டிற்கு டைல்ஸ் பொருத்த வந்திருப்பதாக கூறியுள்ளனர். அதை நம்பிய முனிகிருஷ்ணப்பா, அவர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். அப்போது உள்ளே வந்த அவர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். பின்னர் முனிகிருஷ்ணப்பாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை கட்டிப்போட்டனர். இதையடுத்து பீரோவில் இருந்த ரூ.2.71 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இந்தநிலையில் ேநற்று காலை வெகுநேரம் ஆகியும் முனிகிருஷ்ணப்பாவின் வீட்டில் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டின் கதவை திறந்துள்ளனர். அப்போது முனிகிருஷ்ணப்பா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிழே விழுந்து காயமடைந்து கிடப்பதை பார்த்த அவர்கள் உடனே அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து முனிகிருஷ்ணப்பா சிக்பள்ளாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி ேதடிவருகின்றனர்.