நாளை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2023-05-31 21:23 GMT

பெங்களூரு:

5 வாக்குறுதிகள்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், கிரஹஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பாலிடெக்னிக் படித்தோருக்கு தலா ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கி அமல்படுத்தப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கடந்த மே மாதம் 20-ந் தேதி அமைந்தது. புதிய ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே 5 வாக்குறுதிகளுக்கும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அவற்றை அமல்படுத்துவதற்கான தேதி அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சித்தராமையா கூறினார். இந்த விஷயத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக குறை கூறி வருகின்றன.

ஆட்சிக்கு நெருக்கடி நிலை

காங்கிரசின் வாக்குறுதியை அடுத்து கர்நாடகத்தில் சில பகுதிகளில் கிராம மக்கள் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும், பஸ்களில் பயணிக்கும் சில பெண்கள், காங்கிரசின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி டிக்கெட் பெற மாட்டோம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களால் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 5 திட்டங்களையும் அமல்படுத்தினால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் நிதி ஆதாரங்களை எங்கிருந்து திரட்டுவது என்று தெரியாமல் மாநில அரசு தடுமாறி வருகிறது. கர்நாடக அரசுக்கு தற்போதைய நிலையில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. அது ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தான் உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் கலால் ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே அரசு வரியை உயர்த்த முடியும். ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. அதில் கை வைக்க முடியாத நிலை உள்ளது. கலால் வாி உயர்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட முடியும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இதை தவிர்த்து மாநில அரசுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட வேறு வழிகள் இல்லை என்று நிதி சார்ந்த நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆலோசனை கூட்டம்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் அள்ளி வீசிவிட்டனர். ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றுவதில் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை கர்நாடக அரசு எப்படி நிறைவேற்ற போகிறது என்பதை கர்நாடக மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் பரமேஸ்வர், எம்.பி.பட்டீல், பைரதி சுரேஷ், ஜமீர் அகமதுகான், எச்.கே.பட்டீல் உள்ளிட்ட மந்திரிகள், தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில், உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து மந்திரிகள் தங்களின் ஆலோசனைகளை கூறினர்.

அமல்படுத்துவது உறுதி

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'எனது தலைமையில் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தரவாத வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். நிதித்துறை அதிகாரிகளிடம் இருந்து விவரங்களை பெற்றுள்ளோம். நாளை(இன்று) மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு 2-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. இதில் ஆலோசனை நடத்தப்பட்டு வாக்குறுதிகள் விஷயத்தில் முடிவு எடுக்கப்படும். இந்த 5 வாக்குறுதிகளையும் நாங்கள் அமல்படுத்துவது உறுதி' என்றார்.

அப்போது சித்தராமையாவிடம் ஒரு நிருபர், இந்த திட்டங்களை அமல்படுத்த நிதி ஆதாரத்தை எங்கிருந்து திரட்டுவீர்கள்? என்று கேள்வி கேட்டார். அதற்கு சித்தராமையா, 'உன்னிடம் நிதி கேட்டேனா?. அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என்று கோபமாக பதிலளித்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் அரசு எந்த மாதிரியான முடிவு எடுக்க போகிறது என்பது நாளை (வெள்ளிக்கிழமை) தெரிந்துவிடும். மந்திரிசபை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. அந்த கூட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்