கோர்ட்டு படி ஏறி தேர்தல் வெற்றியை ருசித்த வேட்பாளர்

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரே தொகுதி தான் இடைத்தேர்தலை சந்தித்தது.

Update: 2023-03-27 22:06 GMT

அதுபற்றிய சுவாரசிய தகவல்கள் பின்வருமாறு:-

தரிக்கெரேயில் முதல் இடைத்தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரே தொகுதி தான் முதல் முறையாக இடைத்தேர்தலை சந்தித்துள்ள வரலாற்றை பெற்றுள்ளது.

பொதுவாக ஒரு தொகுதிக்கு பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பின்பு, அங்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர்கள் உயிர் இழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அந்த தொகுதிக்கு 6 மாதத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதனை தான் இடைத்தேர்தல் என்று அழைக்கின்றனர். அதன்படி, தான் தரிக்கெரே தொகுதிக்கு நாட்டிலேயே முதல் முறையாக இடைத்தேர்தல் நடந்திருந்தது.

34 ஓட்டுகளில் தோல்வி

அதாவது நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்பு பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1952-ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற்றிருந்தது. அப்போது சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரே தொகுதிக்கு நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் டி.சி.பசப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். அவரை எதிர்த்து கிஷான் மகதூ பிரஜா கட்சி சார்பில் டி.நாகப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.

அப்போது தரிக்கெரே தொகுதியில் 38 ஆயிரத்து 619 வாக்காளர்கள் இருந்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட்டது. அப்போது கிஷான் மகதூர் பிரஜா கட்சி சார்பில் போட்டியிட்ட டி.நாகப்பா 8,093 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.சி.பசப்பா 8,059 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார். அதாவது வெறும் 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் டி.சி.பசப்பா தோல்வியை சந்தித்து இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் அதிகாரிகள் தனது தோல்விக்கு காரணம் என கூறி சுப்ரீம் கோர்ட்டில் டி.சி.பசப்பா வழக்கு தொடர்ந்தார். நாட்டிலேயே தேர்தல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

சுப்ரீம் கோர்ட்டிலும் தீர்க்கமான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை முடித்து தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த டி.சி.பசப்பாவை வெற்றி பெற்றதாக அறிவித்து பரபரப்பு தீர்ப்பு கூறி இருந்தது.

இடைத்தேர்தலில் சகோதரர் வெற்றி

இதன்மூலம் தேர்தலில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் டி.சி.பசப்பாவுக்கு கிடைத்தது. அதன்பிறகு, அவர் தரிக்கெரே தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டு இருந்தார். ஆனாலும் அவரால் முழுமையாக எம்.எல்.ஏ. பதவியை வகிக்க முடியாமல் போனது. அதாவது கடந்த 1956-ம் ஆண்டு டி.சி.பசப்பா மரணம் அடைந்தார்.

இதையடுத்து, 1956-ம் ஆண்டு தரிக்கெரே தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக நடந்த இடைத்தேர்தல் தரிக்கெரே தொகுதி தான். இந்த இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மரணம் அடைந்த டி.சி.பசப்பாவின் சகோதரரான டி.சி.சாந்தப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். இடைத்தேர்தலில் டி.சி.சாந்தப்பா வெற்றி எம்.எல்.ஏ.வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்