மகன் ஓட்டிய கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி சாவு
சித்ரதுர்காவில் மகன் ஓட்டிய கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி உயிரிழந்தார்.
சிக்கமகளூரு:-
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா உழியார் கிராமத்தை சேர்ந்தவர் நயாஜ் உல்லாகான் (வயது 48). இவரது மனைவி ஷபானா பானு. மகன் நயாஜ். இந்த நிலையில், அவர்கள் குடும்பத்திடன் உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நயாஜ் உல்லாகான், உறவினர் பெண்ணான நஸ்ரின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்களுக்கு பின்னால் மகன் நயாஜும், மனைவி ஷபானா பானுவும் காரில் வந்தனர். அப்போது அவர்கள் சித்ரதுர்கா மாவட்டம் ஸ்ரீராம்புரா அருகே அரவள்ளி கிராமத்தின் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக நயாஜ் ஓட்டி சென்ற கார், அவரது தந்தை நயாஜ் உல்லாகான் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நயாஜ் உல்லாகானும், பின்னால் இருந்த நஸ்ரினும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நயாஜ் உல்லாகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நஸ்ரின் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து ஸ்ரீராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் ஓட்டிய கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.