முஸ்லிம் பெண்ணுடன் ஆட்டோவில் சென்ற வாலிபர் மீது கொடூர தாக்குதல்-10 பேர் கைது
பெலகாவி:-/
பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா பி.ஜி.மல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியானேஸ்வர்(வயது 24). இவர் காலணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் தனது தோழியான ஒரு முஸ்லிம் இளம்பெண்ணுடன் பெலகாவி டவுன் காடே பஜார் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் தியானேஸ்வரனிடம் கேள்வி கேட்டு தகராறு செய்தனர். மேலும் இதுபற்றி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த கும்பல், வாலிபர் தியானேஸ்வர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர் முஸ்லிம் இளம்பெண்ணுடன் சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலில் தியானேஸ்வர் பலத்த காயம் அடைந்தார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து 10 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.