சார்மடி மலைப்பாதையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனம்

சார்மடி மலைப்பாதையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-14 16:52 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவில் சார்மடி மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை சிக்கமகளூரு-மங்களூருவை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. தினமும் அந்த மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிக்கமகளூருவில் இருந்து மங்களூரு நோக்கி போலீஸ் வாகனம் ஒன்று சென்றது. இதில் 30 போலீஸ்காரர்கள் பயணித்தனர். அந்த போலீஸ் வாகனம் சார்மடி மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது நடுரோட்டில் திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் போலீஸ் வாகனத்தை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் வாகனத்தை தள்ளி சாலையோரம் நிறுத்தினர்.

இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறுகிய பாதை என்பதால், ஒரு வாகனம் மட்டும் தான் செல்ல முடிந்தது. இதையடுத்து போலீஸ் வாகனம் பழுது பார்க்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக சார்மடி மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்