வலுக்கட்டாயமாக தாய்ப்பால் குடிக்க வைத்ததால் 4 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி பரிதாப சாவு
வலுக்கட்டாயமாக தாய்ப்பால் குடிக்க வைத்ததால் 4 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. செவிலியர்களை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு:
குழந்தைக்கு உடல் நலக்குறைவு
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சுராப்புராவை சேர்ந்தவர் கோபாலா. இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீனாட்சிக்கு 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அந்த குழந்தையை பெற்றோர் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மூச்சுத்திணறல் மற்றும் பிற உடல் நலக்குறைவு உள்ளது. எனவே குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து பெற்றோர், குழந்தையை ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
4 மாத குழந்தை சாவு
தனியார் மருத்துவமனையில் வைத்து குழந்தை அழுதுள்ளது. இதனை பார்த்த செவிலியர்கள், குழந்தை பசியால் அழுகிறது என்றும், தாய்ப்பால் கொடுக்கும்படியும் மீனாட்சியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருப்பதால், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததாக மீனாட்சி செவிலியர்களிடம் கூறினார்.
ஆனால் செவிலியர்கள், தாய்ப்பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் மீனாட்சி, குழந்தைக்கு தாய்ப்பால் குடித்தார். குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும் செவிலியர்கள், கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மீனாட்சியிடம் தெரிவித்தனர். இதனால் அவர் தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சியும் அவரது உறவினரும் கதறி அழுதனர். மேலும் குழந்தையின் சாவுக்கு செவிலியர்கள் தான் காரணம் என்று கூறி அவர்களுடன் தகராறு செய்தனர். இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் அடைந்த செவிலியர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த நிலையில் போராட்டம் பற்றி அறிந்ததும் மருத்துவமனையின் தலைமை டாக்டர் மோகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செவிலியர்கள் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ஹாசன் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.