விவாகரத்தான 35 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து ஏற்க மறுப்பு; வாலிபருக்கு வலைவீச்சு

சிவமொக்காவில், விவாகரத்தான 35 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துவிட்டு தற்போது ஏற்க மறுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-08-22 14:59 GMT

சிவமொக்கா;

35 வயது பெண்

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா வினோபா நகர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அந்த பெண், ஒரு திருமண விழாவில் சாகர் அருகே உள்ள ஜோக் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்து உள்ளார்.

இருவரும் பரஸ்பரம் பேசி பழகினர். அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர்.

விவாகரத்து

இந்த சந்தர்ப்பத்தில் அந்த வாலிபர், அப்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். முதலில் காதலை ஏற்க மறுத்த அந்த பெண், தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவள் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த வாலிபர், அப்பெண்ணிடம் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும், வாலிபரின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

பின்னர் தனிமையில் சந்தித்த அவர்கள் உல்லாசமும் அனுபவித்து வந்தனர். அதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்தனர்.

கோவிலில் திருமணம்

இந்த நிலையில் அந்த பெண், தனது காதலனான வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி சிவமொக்கா அருகே ஹரகெரே பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் அந்த வாலிபர், அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர்.ஆனால் அன்று அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் மறுநாள் வரும்படி அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மறுநாள் சிவமொக்கா டவுன் சாகர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்துவிடும்படி அந்த பெண்ணிடம் கூறிவிட்டு அவரது காதலன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.


போலீசில் புகார்

அதன்பேரில் அந்த பெண் அங்கு வந்து காத்திருந்தார். ஆனால் அவரது காதலன் வரவில்லை. மாறாக அவரது சித்தப்பாவும், அண்ணனும் அங்கு வந்தனர்.

அவர்கள் அந்த பெண்ணை மிரட்டி இந்த திருமணம் செல்லாது என்றும், வாலிபரை மறந்துவிடும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அதையடுத்து தனது காதலனை அந்த பெண் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியவில்லை.

இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொண்டு தற்போது ஏற்க மறுப்பதாக கூறி சாகர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது காதலனையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்