மைசூருவில் 3 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
மைசூருவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த 3 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மைசூரு:
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு தாலுகா சேத்தனஹள்ளி கிராமத்தின் அருகே ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சேத்தனஹள்ளி கிராமத்தில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. இதனை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால், பீதியடைந்த கிராம மக்கள், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
கூண்டில் சிக்கியது
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் சேத்தனஹள்ளி கிராமத்தில் ரூபாய் நோட்டு தயாரிக்கும் தொழிற்சாலையின் பின்புறம் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேத்தனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் வனத்துறையினரும் விரைந்து வந்தனர். பின்னா் வனத்துறையினர், சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
மக்கள் நிம்மதி
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 3 வயது ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை நாகரஒலே வனப்பகுதியில் விடப்படும் என்றார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.