கார் மோதி 2 வயது குழந்தை பலி

பெங்களூருவில் விளையாடி கொண்டிருந்தபோது கார் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-03-18 18:45 GMT

ஒயிட்பீல்டு:

2 வயது குழந்தை

பெங்களூரு ஒயிட்பீல்டு மைத்ரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரா சிங். தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகன் சவுரி யாதவுடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மேந்திரா சிங், குடியிருப்பு முன்பு நின்று கொண்டு கார் டிரைவர் மனோஜ் என்பவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது மனோஜ், காரில் அமர்ந்தபடி பேசி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தர்மேந்திர சிங்கின் 2 வயது மகன் சவுரி யாதவ், காரின் முன்பு நின்றபடி விளையாடி கொண்டிருந்தான். அதனை தர்மேந்திர சிங்கும், கார் டிரைவரும் கவனிக்கவில்லை என தெரிகிறது.

கார் மோதி சாவு

இந்த நிலையில் டிரைவர் மனோஜ், காரின் முன்பு குழந்தை நிற்பதை கவனிக்காமல் தனது காரை இயக்கியதாக தெரிகிறது. இதனால் கார், குழந்தை சவுரி யாதவ் மீது மோதி ஏறி இறங்கியது. இதில் குழந்தை சவுரி யாதவ், பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்மேந்திர யாதவ், டிரைவர் மனோஜ், ஆகியோர் உடனடியாக குழந்தை சவுரி யாதவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை சவுரி யாதவ் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒயிட்பீல்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கார் டிரைவர் மனோஜை கைது செய்தனர். இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்