உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 96 பேர் பணி நீக்கம்; போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உப்பள்ளி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் 96 பேர் பணி நீக்கம் யெ்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உப்பள்ளி ரெயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-17 18:45 GMT

உப்பள்ளி:

உப்பள்ளி ரெயில் நிலையம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஸ்ரீசித்தாரோட சுவாமி (எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி) ரெயில் நிலையம் அமைந்துள்ளது. தென்மேற்கு ரெயில்வேயின் தலைமையமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் நாட்டிலேயே மிக நீளமான நடைமேடை அமைந்துள்ளது. அதாவது 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் 96 தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், உப்பள்ளி ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

பணி நீக்கம்

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையல் வேலை பார்த்து வரும் தூய்மை பணியாளர்களை நீக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்த 96 தூய்மை பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று உப்பள்ளி ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

போராட்டம்

மேலும் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உப்பள்ளி ரெயில் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இரவு, பகல் பாராமல் நாங்கள் உழைத்து வருகிறோம். ஆனால் திடீரென்று ரெயில்வே நிர்வாகம் எங்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. புதிதாக 60 பேருடன் எந்திரங்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்வதாக சொல்கிறார்கள்.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே மேலாளர், ரெயில் நிலைய மேலாளர் நடவடிக்கை எடுத்து எங்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சாகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை கேட்க எந்த அதிகாரிகளும் வரவில்லை. தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்