சூதாட்டத்தில் ஈடுபட்ட 95 பேர் கைது

பெங்களூருவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-22 21:58 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் பல்வேறு இடங்களில் கேளிக்கை விடுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் கேளிக்கை விடுதிக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டம் நடந்தது உறுதியானது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 43 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் சூதாட்ட பணம், சிகரெட் பெட்டிகள், போன்பே ஸ்கேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விடுதி ஒன்றில் சூதாட்டம் நடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 52 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை மீட்டனர். இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் கூறுகையில், பேடராயனபுரா பகுதியில் சூதாட்டம் நடப்பதாக எழுந்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிங்கனகவுடா பட்டீல் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் கைது செய்தனர். பல நாட்களாக இதுபோன்று சூதாட்டம் நடந்து வந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிந்தது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்