அம்பேத்கரை இழிவுபடுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது
அம்பேத்கரை இழிவுபடுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
அம்பேத்கருக்கு இழிவு
பெங்களூருவில் ஜெயின் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் கடந்த 8-ந் தேதி மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றின்போது அதில் கலந்து கொண்ட மாணவர்கள், அம்பேத்கரை இழிவுப்படுத்தும் நோக்கில் நாடகம் ஒன்றை நடித்தனர்.
மேலும் தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், தீண்டாமைக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அம்பேத்கரை இழிவுபடுத்திய மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் மீது மராட்டியத்தில் தலித் அமைப்பினர் புகார் அளித்தனர். இதேபோல் பெங்களூரு சித்தாப்புரா போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
7 மாணவர்கள் கைது
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக 7 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
முன்னதாக பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்தினர் மீது துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறி இருந்தார்.அம்பேத்கரை இழிவுபடுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தேசிய மாணவர் அமைப்பினர், தலித் அமைப்பினர் நேற்று முன்தினம் ஜெயின் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.