கஞ்சா பயன்படுத்தியதாக டாக்டர்கள் உள்பட மேலும் 9 பேர் கைது

மங்களூருவில் கஞ்சா பயன்படுத்தியதாக டாக்டர்கள் உள்பட மேலும் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-21 21:33 GMT

மங்களூரு:-

கஞ்சா பயன்பாடு

மங்களூருவில் கடந்த 12-ந்தேதி கஞ்சா பயன்படுத்தியது மற்றும் விற்றதாக 2 டாக்டர்கள், 6 மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஒரு கஞ்சா வியாபாரி என 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் மங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கஞ்சா பயன்படுத்தியதாக 4 டாக்டர்கள் உள்பட மேலும் 9 பேரை மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

9 பேர் கைது

மங்களூரு நகரில் சமீப காலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கஞ்சா விற்றது, பயன்படுத்தியது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கஞ்சா பயன்படுத்தியதாக மேலும் 9 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் டாக்டர்கள் ஆவார்கள்.

விசாரணையில் அவர்கள் மங்களூரு கே.எம்.சி. மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றி வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விதுஸ்குமார் (வயது 27), இஸ்மிட்டா (27), சீனிவாஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் சித்தார்த் பவாஸ்கர் (29), துர்கா சஞ்சீவினி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் சுதீந்திரா (34) மற்றும் கே.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் டெல்லியை சேர்ந்த சரண்யா (23), கேரளாவை சேர்ந்த சூர்யஜித்தேவ் (20), ஆயிஷா முகமது (23), தெலுங்கானாவை சேர்ந்த பிரனய் நடராஜ் (24), சைதன்யா ஆர்.துமுலுரி (23) என்பது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்