காஷ்மீரில் கார் விபத்தில் ராணுவ வீரர் உள்பட 9 பேர் பலி
காஷ்மீரில் கார் விபத்தில் ராணுவ வீரர் உள்பட 9 பேர் பலியாகினர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் கார்கில் நகரில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி ஒரு வாடகை கார் சென்று கொண்டிருந்தது. அதில், ஒரு ராணுவ வீரர் உள்பட 9 பேர் பயணம் செய்தனர். ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் கேந்தர்பால் மாவட்டம் சோஜிலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இதையடுத்து, போலீசார், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். காயங்களுடன் காணப்பட்ட மீதி 5 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
பலியானவர்கள் காஷ்மீர், ஜார்கண்ட், குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.