ரேவ் பார்ட்டியில் பங்கேற்ற 8 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு அருகே, ரெசார்ட்டில் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே, ரெசார்ட்டில் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரேவ் பார்ட்டி
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி அருகே சாதஹள்ளியில் உள்ள ரெசார்ட்டில் ரேவ் பார்ட்டிக்கு(மதுவிருந்து) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்தில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களின் மகன்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டதாக தொழில் அதிபரான அங்கித் உள்பட 8 பேர் மீது சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அங்கித் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டு பெண்கள் மீட்பு
இந்த நிலையில் ரேவ் பார்ட்டி நடந்த ரெசார்ட் சீனிவாஸ் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்து உள்ளது. அவர் கன்னட திரையுலகினர், போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது தலைமறைவாக உள்ள சீனிவாஸ் சுப்பிரமணியனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் ரேவ் பார்ட்டிக்கு வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனையின் போது 6 வெளிநாட்டு பெண்களை போலீசார் மீட்டு இருந்தனர். அவர்களிடம் பாஸ்போர்ட், விசா இல்லை என்பது தெரியவந்தது. தற்போது அந்த 6 வெளிநாட்டு பெண்களும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.