சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்: 8 பேர் பலி - ஆந்திராவில் பரபரப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கந்துகுரு (ஆந்திரா),
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கந்துகுருவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் கட்சியினர் இறந்தது கட்சிக்கு பெரும் இழப்பு. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலுங்கு தேசம் கட்சி அனைத்து வழிகளிலும் துணை நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்ததோடு, காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக மாநிலத்தில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால், இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.