ஜெயின் துறவி கொலையில் கைதான 2 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

ஜெயின் துறவி கொலையில் கைதாகி உள்ள 2 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து பெலகாவி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-11 21:30 GMT

பெலகாவி:-

துறவி கொலை

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் நந்திபர்வத மடம் உள்ளது. இந்த மடத்தின் துறவியாக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தில் இருந்து மாயமானார். இதுகுறித்து சிக்கோடி போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயின் துறவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக மடத்தை சேர்ந்த நாராயண் மற்றும் ஹாசன் சாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஜெயின் துறவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட ஜெயின் துறவியின் உடல் உறுப்புகளை மீட்கப்பட்டது. ஜெயின் துறவியின் கொலையை கண்டித்து அந்த சமூகத்தை சேர்ந்தவர் நேற்று முன்தினம் சிக்கோடி உள்பட பல்வேறு பகுதிகளில் அமைதி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயின் துறவி கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி, பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

7 நாள் காவல்

இந்த நிலையில் கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பெலகாவி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக, அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுக்க, போலீசார் அனுமதி கோரினர். அதனை விசாரித்த நீதிபதி, கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டுள்ள 2 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்களை விசாரணைக்காக போலீசார், பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் வருகிற 17-ந் தேதி வரை விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்