கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
மைசூரு: கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
கோவிந்த் கார்ஜோள்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் மைசூருவுக்கு வந்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. சில இடங்களில் ஏரி, குளங்கள் கரை உடைந்து விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.
ரூ.600 கோடிக்கு பாதிப்பு
இந்த மழை, வெள்ளத்தால் கர்நாடகத்தில் ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மைசூரு மாவட்டத்தில் ரூ.10.40 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிவாரண நிதியையும் உடனடியாக கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நிவாரண பணிகளில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.