நடப்பாண்டில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு

நடப்பாண்டில் இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-23 18:45 GMT

மண்டியா:

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் உயிர்நாடியாக இந்த அணை திகழ்கிறது.

இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததுடன், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்தும் விடப்பட்டு வந்தது.

3 முறை நிரம்பியது

தொடர் கனமழை காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக கே.ஆர்.எஸ். அணை ஒரே ஆண்டில் 3 முறை நிரம்பி உள்ளது. அதாவது கடந்த ஜூலை, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நிரம்பி உள்ளது. கடந்த 3 மாதங்களாக அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த தண்ணீர் காவிரியில் பாய்ந்தோடி தமிழகத்தின் மேட்டூர் அணையை சென்றடைகிறது. கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் கர்நாடக மற்றும் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு

நடப்பாண்டில் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதியில் இருந்து இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகம், தமிழகத்துக்கு காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி மேம்பாட்டு ஆணையம் கர்நாடக அணைகளில் நீர் இருப்பையும், தண்ணீர் திறக்கப்படுவதையும் கண்காணித்து வருகிறார்கள்.

பிரச்சினை எழாது

கர்நாடகம் ஒரு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது நல்ல மழை பெய்து அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால், நடப்பாண்டில் இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் (530 டி.எம்.சி.) திறக்கப்பட்டுள்ளது.

இதனால் இருமாநிலங்கள் இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்சினை எழாது. விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்