பெங்களூருவுக்கு கடத்திய ரூ.53 லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து விமானத்தில் பெங்களூருவுக்கு கடத்திய ரூ.53 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Update: 2022-12-26 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதனால் அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பயணி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியிடம் இருந்து ஒரு கிலோ 13 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.53.22 லட்சம் ஆகும். அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்