குடகில் கிசான் சம்மான் திட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் பயன்
குடகில் கிசான் சம்மான் திட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
குடகு:-
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குடகு மாவட்டம் மடிகேரி காந்தி மைதானத்தில் நேற்று மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹெலிகாப்டர் மூலம் காந்தி மைதானத்துக்கு வந்தார். அவரை பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், அவர் காந்தி மைதானத்தில் நடந்த விழாவை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மகிழ்ச்சி அளிக்கிறது
காபி நாட்டுக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குடகின் கலாசாரம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. குடகு மாவட்டத்துக்கு அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இது பா.ஜனதாவின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு. மோடி பிரதமர் ஆன பிறகு, முடியாததை கூட சாத்திமாக்கி வருகிறார். கர்நாடகத்தில் 16 ஆயிரம் கோடி கிசான் சம்மான் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இடைத்தரகர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
50 ஆயிரம் விவசாயிகள் பயன்
மோடி ஆட்சியில் ஊழலுக்கு வாய்ப்பு இல்லை. குடகில் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். நம் நாட்டில் உணவு பாதுகாப்புக்கு முக்கிய காரணம் விவசாயிகளின் கடின உழைப்பு தான். ஆனாலும் விவசாாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தது. இதனால் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
காபி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். குடகு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. காங்கிரஸ் வாக்குறுதிபடி எந்த திட்டத்தையும் மக்களுக்கு வழங்கவில்லை.
கர்நாடகத்தின் பெருமை
ஏ.சி. அறையில் இருந்து கொண்டு பாட்டில் தண்ணீரை குடித்து கொண்டு தண்ணீர் பிரச்சினை பற்றி பேசி எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் உண்மைகளை அறிந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பட்ஜெட்டில் குடகு மாவட்டத்துக்கு சிறப்பு தொகுப்புஅறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொடவா சமூகத்தின் முன்னேற்றத்துக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கொடவா சமூகத்துக்கு பெங்களூருவில் 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடகு, கர்நாடகத்தின் பெருமை. குடகை சுற்றி பார்க்க பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலாவில் குடகிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்படுகிறது. இந்திய ராணுவத்துக்கு குடகு ராணுவ வீரர்களின் பங்கு அளப்பரியது. இதனை பிரதமர் மோடியும் நினைவு கூர்ந்தார்.
மக்களை நம்ப வைக்க...
சமூக நீதி என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் இல்லாமல், பா.ஜனதா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அனைத்து சலுகைகளும் செய்து கொடுத்துள்ளது. எல்ேலாரையும், எப்போதும் ஏமாற்ற முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வழங்க முடியாதவற்றை வழங்குவோம் என்று பொய் சொல்லி மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறது. இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.
குடகின் அனைத்து துறை முன்னேற்றத்திற்கும் பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி எஸ்.டி.சோமசேகர், எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.போப்பையா, அப்பச்சு ரஞ்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.