5 குடோன்களில் பயங்கர தீவிபத்து: ரூ.50 லட்சம் பொருட்கள் தீயில் நாசம்

5 குடோன்களில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2023-03-10 18:45 GMT

பேடராயனபுரா:

தீ விபத்து

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரமோத் லே-அவுட் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோன் உள்ளது. 3 ஏக்கர் கொண்ட நிலத்தில் மொத்தம் 5 குடோன்கள் உள்ளன. அதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோன் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் படுத்து தூங்கினர். இந்த சமயத்தில் ஒரு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

அந்த தீ மளமளவென பரவி 5 குடோன்களுக்கு பரவியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பேடராயனபுரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.50 லட்சம் பொருட்கள்

தகவலின் பேரில் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, நீண்டநேரம் போராடி தீயை வீரர்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூ.50 லட்சம் அளவுக்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மார்ஷல்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குடோன் பகுதியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை அகற்றினர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மக்கள் எதிர்ப்பு

தீ விபத்துக்கான காரணம் முதலில் தெரியவில்லை. மின் கசிவு காரணமா அல்லது மர்மநபர்கள் குடோனில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்தனரா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியினர் கூறுகையில், இந்த பகுதியில் குடோன்கள் அமைப்பதற்கு முன்பே, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி வழங்கினர். தற்போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகே குடிசை வீடுகள் ஏராளமாக உள்ளன. அங்கு தீ பரவி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்