லாரியில் கடத்திய 5 ஆயிரம் லிட்டர் மதுபானம் சிக்கியது; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
உத்தர கன்னடாவில் லாரியில் கடத்திய 5 ஆயிரம் லிட்டர் மதுபானம் சிக்கியது. இதுதொடர்பான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கார்வார்;
போலீசார் சோதனை
கார்வார் மாவட்டம் உத்தர கன்னடா வழியாக கோவாவில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக கார்வார் மாவட்ட போதைப்பொருட்கள் தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை மறித்து போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது லாரியில் இருந்த மர்மநபர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி சென்றனர். இதையடுத்து பிடிபட்ட லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
ரூ.1 கோடி மதிப்பிலான...
அப்போது லாரியில் மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியையும், லாரியில் கடத்திய மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு மதுபானங்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.மேலும், கடத்தப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் மதுபானத்தின் மதிப்பு ரூ.94 லட்சம் இருக்கும் எனவும் ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.