வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்பு

உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரியில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2022-08-25 16:44 GMT

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரியில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் தற்போது ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நாளை  அநேக இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தலைநகர் பெங்களூருவில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காட்டாற்று வெள்ளம்

உத்தர கன்னடா மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கோலா தாலுகா பனசகுலி கிராமம் அருகே ஓடும் கங்காவலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஓடியது. இந்த சந்தர்ப்பத்தில் அவ்வழியாக தொழிலாளர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி, அதன் டிரைவர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் லாரியில் பயணித்து வந்த 6 பேரில் ஒருவர் மாயமானார். 5 பேர் மீட்கப்பட்டனர்.

பத்திரமாக மீட்பு

அதாவது விபத்தில் ராஜேஷ் ஹரிகந்த்ரா, சுனில், ராஜு, சிவானந்தா, தினேஷ் ஆகிய 5 பேர் மீட்கப்பட்டனர். லாரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியதும் அவர்கள் லாரி மீது ஏறி நின்று கொண்டு காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அப்போது அங்கு மோட்டார் படகில் சென்று பேரிடர் மீட்பு படையினர் கயிறுகள் மூலம் 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். லாரி டிரைவர் சந்தீப் என்பவர் மாயமானார். அவரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடிவருகிறார்கள். மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்