சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய 5 பேர் கைது
சிக்பள்ளாப்பூரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தை போலீசார் மீட்டனர்.
கோலார் தங்கவயல்:-
போலீஸ் வீட்டில் திருட்டு
சிக்பள்ளாப்பூர் புறநகர் அணகனூரு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாராயணசாமி. போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சரத். கடந்த மாதம்(நவம்பர்) 9-ந் தேதி இவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர். அவர்கள் வீடுகளில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது நாராயணசாமி, அவர்களை தடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கும்பல் நாராயணசாமி மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அவரது மகன் சரத் ஓடி வந்து, தந்தையை காப்பாற்ற முயன்றார்.
அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரையும் சுட்டனர். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த பல லட்சம் ரூபாய் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நாராயணசாமி சிக்கப்பள்ளாபூர் போலீசி்ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
5 பேர் கைது
இந்நிலையில் அந்த கும்பல் உத்தர பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தர பிரதேசம் சென்ற போலீசார் இந்த கொள்ளை தொடர்பான 5 பேரை கைது செய்தனர். நேற்று அவர்கள் சிக்கப்பள்ளாப்பூருக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த ஜதர் அலி(வயது 26), அரீப்(35), ஜம்ஷத்கான்(27) மற்றும் ஆந்திரா மாநிலம் கதிரியை சேர்ந்த மட்டான் முகமது(41), ஹாரீப் கான்(27) என்று தெரியவந்தது. விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.21.91 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் போலீசார் கைப்பற்றினர்.
இந்த கொள்ளையில் முகமது ஜதர்கான்(27), சுபாஷ்கான்(30), பீரேந்திர சிங்(55) ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி
வருகின்றனர்.