மேலும் 5 யானைகள் மைசூரு வருகை
ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க மேலும் 5 யானைகள் மைசூரு வந்துள்ளன.
மைசூரு
மைசூரு தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா ேகாலாகலமாக கொண்டாடப்படுகிறது. மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்.இந்த விழாவின் இறுதி நாளில் ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடைபெறும்.
இதனை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் மைசூருவில் குவிவார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன.
முதல் கட்டமாக கடந்த 4-ந் தேதி 9 யானைகள் உன்சூர் தாலுகா வனப்பகுதியில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜம்பு சவாரி ஊர்வலம்
மேலும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அபிமன்யு யானை உள்பட 3 யானைகளுக்கு பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று சாம்ராஜ் நகர் மாவட்டம் கே.குடி வனப்பகுதி, பந்திப்பூர் யானைகள் முகாம், ராம்புரா, துபாேர ஆகிய முகாம்களில் இருந்து மேலும் 5 யானைகள் அரண்மனை வளாகத்திற்கு வந்தன.
அதாவது, அஸ்வந்தம்மா (வயது41), ரோகித் (21), பிரசாந்தா (50), ஹிரன்யா (46), லட்சுமி (52) ஆகிய 5 யானைகள் வந்தன. இந்த யானைகளுக்கு அரண்மனை மண்டலி சார்பில் சிறப்பு பூைஜ அளிக்கப்பட்டது.
அப்போது அரண்மனை வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த யானைகளை பார்த்து 5 யானைகளும் குதுகலம் அடைந்தன.
மருத்துவ முகாம்
யானைகளுடன் பாகன்கள் அவரது குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்களுக்கு தங்குவதற்கு அரண்மனை வளாகத்தில் தற்காலிக செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடம், உணவு, விளையாட்டு, மருத்துவ முகாம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5 யானைகளுக்கு நடைபயிற்சி, உடல் மருத்துவ பரிசோதனை, சிறப்பு உணவு போன்றவை வழங்கப்படுகிறது, என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.