'மக்களின் மேம்பாட்டுக்கு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி உள்ளது'- கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம்
மக்களின் மேம்பாட்டுக்கு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கர்நாடக அரசுக்கு தாவர்சந்த் கெலாட் புகழாரம் சூட்டி உள்ளார்.
பெங்களூரு:-
இலவசமாக பயணிக்கிறார்கள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம் பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவா்சந்த் கெலாட் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதில் அவர் பேசியதாவது:-
கர்நாடகம் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலம். இங்கு நிலையான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. நவீன விஷயங்கள் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கர்நாடக அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மேம்
பாட்டிற்காக 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதில் பெண்களுக்கு சக்தி, கிரகலட்சுமி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள்.
நூற்றாண்டு விழா
நமது நாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதில் நாடும், கர்நாடகமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் பலமாக உள்ளது. பலமான பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற நாம் தொடர்ந்து நடைபோட்டு வருகிறோம். 24 ஆண்டுகளுக்கு பிறகு நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளோம்.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் நாட்டு மக்களின் உணர்வுகளை அறிந்து நாம் நமது இலக்கை அடைய பாடுபட வேண்டும். இன்று நமது நாட்டை உலக நாடுகள் கவுரவத்துடன் பார்க்கின்றன. நாம் அனைவரும் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு நமது கடமையை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.