கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
பஞ்சாபில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
படாலா,
பஞ்சாபின் படாலாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் காயமடைந்தான். அவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் ஆறு பேர் பயணம் செய்தனர். அவர்கள் படாலாவில் இருந்து ஜலந்தர் சாலையில் படாலாவில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சாஹல் கலன் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்றின் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும் 13 வயது சிறுவன் காயமடைந்தான். தற்போது சிறுவன் படாலா சிவில் மருத்துவமனையில் இருந்து அமிர்தசரசில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.