பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; பெண் உள்பட 6 பேர் கைது
பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு
பெண் உள்பட 5 பேர் கைது
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு கே.ஜி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபூதி ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ஏரி பகுதிக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து பெங்களூருவில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான 506 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.3 கோடி ஆசிஷ் ஆயில்
இதுபோல ஜெயநகர் போலீசார் ஆசிஷ் ஆயில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆந்திராவுக்கு சென்ற ஜெயநகர் போலீசார் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு ஆசிஷ் ஆயிலை கடத்தி வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போலீசார் மீது வேனில் வந்தவர்கள் கற்களால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
ஆனாலும் அந்த வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ ஆசிஷ் ஆயில், ரூ.20 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேர் மீதும் கே.ஜி.நகர், ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை கமிஷனர் பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்.