திருட்டு வழக்குகளில் 5 பேர் கைது
திருட்டு வழக்குகளில் 5 பேர் கைது செய்த போலீசார் ரூ.22½ லட்சம் நகைகள் பறிமுதல் செய்தனர்.
உளிமாவு:-
ஆந்திராவை சேர்ந்த ஒரு தம்பதி பெங்களூரு உளிமாவு பகுதியில் சமீபத்தில் வாடகை வீட்டில் குடியேறினர். வீட்டை சுத்தப்படுத்திய போது அந்த தம்பதி நகை, பணம் இருந்த பையை வீட்டின் வெளியே வைத்து இருந்தனர். அந்த பையை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து தம்பதி அளித்த புகாரின்பேரில் உளிமாவு போலீசார் மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில் தம்பதியின் நகை, பணத்தை திருடியதாக ஒரு வாலிபரை உளிமாவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வாலிபருக்கு 18 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இன்னொரு திருட்டு வழக்கில், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரை சேர்ந்த அனுமந்தா, கிரண், சரணப்பா ஆகிய 3 பேரை உளிமாவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னொரு திருட்டு வழக்கில் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வரும் ஆசிப் என்பவரை கைது செய்த உளிமாவு போலீசார் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். கைதான 5 பேர் மீதும் உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.