நாட்டில் 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத படையை சேர்ந்த 436 பேர் தற்கொலை; அரசு தகவல்

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத படையை சேர்ந்த 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என நாடாளுமன்றத்தில் அரசு இன்று தெரிவித்து உள்ளது.

Update: 2023-03-15 12:48 GMT



புதுடெல்லி,


நாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பணியின்போது அவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மேலவையில் பா.ஜ.க. எம்.பி. சோனல் மான்சிங், மத்திய பாதுகாப்பு படையில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன என தெரிவித்து, அதுபற்றிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அளித்த எழுத்துப்பூர்வ முறையிலான பதிலில், 2020-2022 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய காவல் படை என மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் 2020-ம் ஆண்டில் 144 பேரும், 2021-ம் ஆண்டில் 157 பேரும், 2022-ம் ஆண்டில் 135 பேரும் தற்கொலை செய்து உள்ளனர்.

இதில், அதிக அளவாக சி.ஆர்.பி.எப். வீரர்களில் 154 பேர் அடங்குவர். இதன்படி அவர்களில், 2020-ம் ஆண்டில் 54 பேரும், 2021-ம் ஆண்டில் 57 பேரும், 2022-ம் ஆண்டில் 43 பேரும் தற்கொலை செய்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் மொத்தம் 111 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 2020-ம் ஆண்டில் 30 பேரும், 2021-ம் ஆண்டில் 44 பேரும், 2022-ம் ஆண்டில் 37 பேரும் தற்கொலை செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்த தற்கொலைகளை தடுக்கவும், கண்டறியவும், தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிரடி படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என இணை மந்திரி தெரிவித்து உள்ளார். அதுபற்றிய அறிக்கை தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்