கர்நாடகத்தில் புதிதாக 430 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் புதிதாக 430 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-10-06 18:45 GMT

பெங்களூரு:

படுக்கை வசதிகள்

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இதய நோய் மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நிலையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ரூ.8 லட்சம் செலவு செய்யப்படும். அங்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். மேலும் அந்த சமுதாய நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'டெலிமெடிசன்' வசதி செய்து கொடுக்கப்படும்.

கண் பரிசோதனை

ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும். புதிதாக 81 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கு தாலுகா, கிராம அளவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பெங்களூருவிலும் இத்தகைய முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மூத்த குடிமக்களுக்கு கண் பரிசோதனை, தேவைப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை, ஏழைகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும். ஏழைகளுக்கு காது கேளாதோருக்கு நவீன கருவியை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்த சுத்திகரிப்பு செய்யும் திறனை அதிகரித்துள்ளோம்.

ஊட்டச்சத்தை அதிகரிக்கும்...

விவசாயிகளுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் வகையில் யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டம் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிதாக 4,000 அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்படுகின்றன. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தூய்மை மிக முக்கியம் ஆகும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை அமைத்து கொடுக்கப்படும்.கர்நாடகத்தில் புதிதாக 430 நம்ம மருத்துவ கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவில் மட்டும் 240 கிளினிக்குகள் தொடங்கப்படும். அதாவது வார்டுக்கு ஒரு கிளினிக் தொடங்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரிகள் நிறுவப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.

மருத்துவ சேவைகள்

ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரியில் சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் இதன் மையங்கள் கே.சி.ஜெனரல் போல் மாநிலத்தின் பிற அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயாராக உள்ளது.

இந்திரா காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரி, ஜெயதேவா, கித்வாய், நிமான்ஸ் உள்பட முக்கிய ஆஸ்பத்திரிகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன. இந்த கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் விபத்து பிரிவு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அனைவருக்கும் நல்ல தரமான மருத்துவ சேவைகளை வழங்குவது அரசு மற்றும் தனியார் துறையின் கடமை ஆகும். அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறவர்களுக்கு பணியுடன் சமூக பொறுப்பும் உள்ளது. சுகாதாரமான சமுதாயம் இருந்தால் வளர்ச்சி சாத்தியமாகும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்