சிவமொக்காவில் பட்டாசு விலை 40 சதவீதம் உயர்வு
சிவமொக்காவில் பட்டாசு விலை 40 சதவீதமாக உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிவமொக்கா:
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுதான். இந்த பட்டாசு உற்பத்திகள் படிப்படியாக குறைந்து வருவதால் விலை உயர்வுகளும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் பட்டாசு விலை 40 சதவீதம் உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி சிவமொக்கா டவுன் பி.எச்.ரோட்டில் உள்ள நேரு மைதானத்தில் 13 கடைகள், கர்நாடக அரசு பள்ளியில் 37 கடைகள் அமைத்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் குடும்ப தொகுப்பு எனப்படும் 60 வகையான பட்டாசுகள் அடங்கிய பெட்டி கடந்த ஆண்டு ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு அவை ரூ.1,500 விற்பனைக்கு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு வெடிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இவை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர். இருப்பினும் பட்டாசுகள் வாங்கும் ஆர்வம் குறையவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது:- பட்டாசுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசின் விலையும் அதிகரித்துள்ளது என்றனர்.