தெலுங்கானாவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு
உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 25-ந் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர்களில் 4 பெண்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பலியானார்கள். இதையடுத்து அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது. குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தது.
மேலும், 4 பெண்களின் மரணம் குறித்து பொது சுகாதார இயக்குனர் சீனிவாச ராவ் தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. அத்துடன், ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் உரிமம் பறிக்கப்பட்டது. மீதி 30 பெண்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.