கோவில் மணிகளை திருடிய 4 பேர் சிக்கினர்

கோவில்களில் புகுந்து மணிகளை திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-10 18:45 GMT

குடகு:-

கோவில் மணி திருட்டு

குடகு மாவட்டத்தில் உள்ள கோனிகொப்பாவில் உள்ள மாயமுடி, காமதேஸ்ரீ, மகாதேவர் கோவில்கள், பொன்னம்பேட்டை நிட்டூர் கர்மாடில் உள்ள காலபைரேஸ்வரர் கோவில், பிலூரில் உள்ள கல்லூகுடி ஈஸ்வரன் கோவில், மகாதேவர் கோவில், துர்கை அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்கு கட்டப்பட்டிருக்கும் மணிகளை திருடி வந்தனர். இதுவரை 800 கிலோ எடை கொண்ட மணிகள் திருடுபோயிருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகார்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்த புகார்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் கோவில் மணிகளை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவில் மணிகளை திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மைசூரு ஆர்.எஸ் நாயுடு பகுதியை சேர்ந்த அம்ஜத் அகமது (வயது 37), அஜ்ஜி லே அவுட்டை சேர்ந்த சபியுல்லா (22), ஹைதர் (36), கசரே கிராமத்தை சேர்ந்த சுல்பிகர் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் பொருட்கள் பறிமுதல்

அவர்கள் இரவு நேரங்களில் கோவில்களுக்குள் நுழைந்து, மணிகளை திருடி அதை வெளி மாவட்டங்களில் விற்பனை செய்தது தெரிந்தது. இதுவரை இவர்கள் மீது 18 வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த கைது நடவடிக்கையின் மூலம் அந்த வழக்குகளில் தீர்வு காணப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 750 கிலோ மணிகள், 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்