வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களில் 4 பேரை, சத்தியமங்கலம் அழைத்து சென்று போலீசார் விசாரணை
வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களில் 4 பேரை சத்தியமங்கலத்திற்கு அழைத்து சென்று பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
பெங்களூரு: வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களில் 4 பேரை சத்தியமங்கலத்திற்கு அழைத்து சென்று பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
15 பேர் கைது
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டு வன்முறை நடந்தது. அதுபோல கர்நாடகம் முழுவதும் வன்முறையை அரங்கேற்ற திட்டம் தீட்டி வருவதாக பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேரை கே.ஜி.ஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களை தங்களது காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது இந்த வழக்கில் 1-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள நசீம் பாஷா 3 மாநிலங்களின் பி.எப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்ததும், இளைஞர்களை மூளைச்சலவை செய்வதில் முக்கிய பங்காற்றியதும் தெரியவந்தது. இதனால் அவரிடம் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு...
இந்த நிலையில் கைதானவர்களில் நசீம் பாஷா உள்பட 4 பேரை சாம்ராஜ்நகர் மற்றும் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதனால் நேற்று அவர்கள் 4 பேரையும் சாம்ராஜ்நகர், சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று கே.ஜி. ஹள்ளி போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்கள் வனப்பகுதிக்கு வந்து சென்றதற்கான காரணத்தை கூறவில்லை. ஆனாலும் 4 பேரும் வனப்பகுதியில் வைத்து வன்முறையை அரங்கேற்ற திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும், வனப்பகுதிக்குள் பயிற்சி எடுத்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவர்கள் வனப்பகுதிக்கு சென்று வந்தது எதற்காக என்று தீவிரமாக விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.