ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து படுகொலை - ராஜஸ்தானில் பயங்கரம்
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, உடல்களை தீவைத்து எரித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள செரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (50). பூனாரமின் மகனுக்கு திருமணமாகி தபூ (23) என்ற மனைவியும், மனிஷா என்ற 6 வயது மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடிசையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பூனாரமின் மகன் கல்குவாரிக்கு வேலை சென்றுவிட்டார். குடிசையில் இருந்த மற்ற 4 பேரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மர்ம கும்பல் ஒன்று திடீரென குடிசைக்குள் புகுந்தது. அங்கு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மனிஷா உள்பட 4 பேரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் குடிசைக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றனர். குடிசை எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் குடிசை எரிந்து நாசமானது.
இதையடுத்து, கரிக்கட்டைகளாகி கிடந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரதேபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, இந்த கொடூரத்தை அரங்கேற்றிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.