தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க 4 கும்கி யானைகள் வருகை

விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் 2 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்தும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

Update: 2022-09-13 16:12 GMT

குடகு: விராஜ்பேட்டை அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் 2 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்தும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

புலியை பிடிக்க...

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே மார்கொள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த புலி காபித்தோட்டங்களில் பதுங்கி இருந்து கால்நடைகளை வேட்டையாடி கொன்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு பசுமாட்டை, புலி வேட்டையாடி கொன்று இறைச்சியை தின்றிருந்தது. மேலும் காபித்தோட்டத்திற்கு வரும் தொழிலாளிகளையும் புலி அச்சுறுத்தி வருகிறது. இதனால் அவர்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த புலியை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் இதுபற்றி அரசிடம் தெரிவித்து புலியை பிடிக்க அனுமதி பெற்றனர்.

4 கும்கி யானைகள்

மேலும் இதற்காக மார்கொள்ளி கிராமத்தையொட்டிய 2 காபி தோட்டங்களில் இரும்பு கூண்டுகளை வைத்திருந்தனர். ஆனால் புலி சிக்கவில்லை. இதையடுத்து துபாரே யானைகள் முகாமில் இருந்து புலியை பிடிக்க லட்சுமணா, ஈஸ்வரா, இந்திரா, அஞ்சன் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அந்த யானைகளைக் கொண்டு பாடகா பானங்காலா பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு அந்த புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று வனத்துறை அதிகாரிகள் மூர்த்தி, சிவராம் பாபு, நேரு, அசோக் ஹனகுந்த் ஆகியோர் தலைமையில் 50 வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து கும்கி யானைகளுடன் அந்த புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த புலி வனத்துறையினரிடம் சிக்கவில்லை.

இரும்பு கூண்டுகள்

அந்த புலியை பிடிக்கும் பணி இன்று(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்றும், அதுவரையில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் 2 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்து அதைச் சுற்றி 10 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அந்த புலியை விரைவில் பிடித்து விடுவோம் என்று வனத்துறை அதிகாரி மூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்